Friday, December 12, 2014

புத்தகங்களை 
நே சி ப் போ ம்


எம்.ஜி.சுரேஷ்

வ்வொரு நாள் இரவும் படுக்கைக்குப் போகும் முன் இன்றைய தினம் பயனுடைய தினமாகக் கழிந்ததா என்று நான் யோசித்தபடியே படுக்கைக்குச் செல்வேன். பெரும்பாலான தினங்கள் பயனற்றுக் கழிந்ததாகவே எனக்குத் தோன்றும். ஆனால், இன்றைய தினத்தை நான் ஒரு பயன் மிக்க தினமாகவே என்றும் கருதுவேன்.  இன்றைய தினம் எனது வாழ்க்கையின் பயனுடைய தினங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில், இன்று அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரியின் புத்தகக்கண்காட்சியைத் திறந்து வைக்கும் வாய்ப்பு அல்லவா எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.?

     நான் புத்தகங்களை நேசிப்பவன். எனது வாழ்க்கை புத்தகங்களால் ஆனது. ஒன்று நான் வாசித்த புத்தகங்கள்; இரண்டு நான் எழுதிய புத்தகங்கள். வாசித்த புத்தகங்களால் நான் மேன்மையடைந்தேன்; நான் எழுதிய புத்தகங்களால் தமிழ் மேன்மை அடைந்தது.

     புத்தகத்தை நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை புத்தகங்களை அதற்கும் மேலாக நண்பன், தத்துவவாதி, வழிகாட்டி என்று சொல்வேன். பல சந்தர்ப்பங்களில் புத்தகங்கள் ஒரு நண்பனாக இருந்து நமக்குத் துணை புரிகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவை நமக்கு புதிய தத்துவ ஒளியைப் பார்க்குமாறு செய்கின்றன. சரியான தருணங்களில் அவை நமக்கு சரியான  வழிகாட்டுகின்றன.

     அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடி எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பார். அவருக்குப் புத்தகம் ஒரு இணை பிரியாத நண்பனாக இருந்தது. அதே அமெரிக்காவின் இன்னொரு ஜனாதிபதியான தியோடார் ரூஸ்வெல்ட்டுக்கோ அது தத்துவவாதியாக இருந்தது. கிப்பன் எழுதிய ரோம் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூல் அவருக்குத் தத்துவம் போதித்தது.   பிரச்சனை வரும் போதெல்லாம அந்த நூலை அவர் எடுத்து வாசிப்பார். மகாத்மா காந்திக்கு ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதி மோட்சம் என்ற நூல் வாழ வைக்கும் வழிகாட்டியாக இருந்தது.  எனவே நாம் புத்தகம் என்பது சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

     ஒரு புத்தகம் வெடி குண்டைப் போல் வெடிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். சொல்லப் போனால் வெடிகுண்டு கூட ஒரு முறைதான் வெடிக்கும். ஒரு நல்ல புத்தகம் திறக்கும் ஒவ்வொரு தடவையும் வெடிக்கும் என்றார் ருஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செகாவ். ஒரு வெடிகுண்டின் வீர்யம் ஒரு புத்தகத்துக்கு உண்டு. பல புத்தகங்கள் உலக வரலாற்றையே மாற்றி இருக்கின்றன. மாவீரன் அலெக்ஸாண்டர் உலகையே வெல்லப் புறப்பட்டதற்குக் காரணம் ஹோமர் எழுதிய இலியாட் என்ற புத்தகம்தான் காரணம். எப்போதும் அந்தப் புத்தகத்தைத் தன் கையில் வைத்திருந்தான் அலெக்ஸாண்டர். இரவு தூங்கும் போது கூட அதைத் தன் தலையணையின் கீழ் வைத்துக் கொண்டுதான் தூங்குவானாம். அந்த ஒரு புத்தகம்தான் உலக் வரலாற்றையே மாற்றியது. இங்கிலாந்தில் அனாதை விடுதிகளில் நடைபெற்று வந்த கொடுமைகளைக் களைவதற்குக் காரணமாக இருந்தது சார்லஸ் டிக்கின்ஸன் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் என்ற நாவல். ருஷ்யாவில் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தது மாக்ஸிம் கார்க்கி எழுதிய தாய் என்ற நாவல். ருஷ்யப் புரட்சிக்குக் காரணமாக இருந்த பத்து கதைகளில் அதுவும் ஒன்று என்று கூறுவார்கள். ராபர்ட் ஸ்பியர், மாரட், வால்டேர், ரூசோ போன்றவ்ர்கள் எழுதிய புத்தகங்கள் ஃபிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தன. எனவே புத்தகங்கள் சக்தி வாய்ந்தவை. பெரிய எழுச்சியை உருவாக்கத்தக்கவை என்று சொல்லலாம்.

     இத்தகைய மதிப்புக்குரிய புத்தகங்கள் நமது நேசிப்பிற்குரியவை. நாம் பெரும்பாலும் புத்தகங்கள் என்றாலே வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே நினைக்கிறோம். பாட சிலபஸுக்கு வெளியேயும் புத்தகங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி பலர் யோசிப்பதே இல்லை. அவை நமக்குத் தேவையில்லை. அதையெல்லாம் யார் படிப்பது என்ற மனநிலை நம்மில் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் தவறான பழக்கம். நூல் நிலையங்களில் அலமாரிகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் லட்சக்கணகான புத்தகங்கள் நமது கையின் தொடுதலுக்காகக காத்திருக்கின்றன என்பதை நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கிறோம்?

     நம்மைப் பொறுத்தவரை பாடப்புத்தகங்களை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறோம். அமெரிக்கர்களைப் போல், ஐரோப்பியர்களைப் போல் நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வாழ்க்கைத் தரம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், அதே அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் அதுதான் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரக் காரணம் என்பதை நாம் கவனிப்பதில்லை. நம்மை விட கல்வித்தரம், தொழில்நுட்ப ஆற்றல் கொண்டுள்ள அமெரிக்க, ஐரோப்பிய இளைஞர்கள் நிறையப் படிப்பதில் ஆர்வம காட்டுகிறார்கள். நாம் புத்தகமா ஐயய்யோ, அதெல்லாம் படிக்க எனக்கு நேரம் இல்லை என்று சலித்துக் கொள்கிறோம். ஆனால் வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் நம்மை விட பிஸியாக இருந்து கொண்டு, நம்மை விட நேரம் போதாமல் இருக்கும் வெள்ளைக்காரர்கள் தினமும் புத்தகம் படிப்பதற்கு நேரம் செலவிடுகிறார்கள். அங்கே நம்மை விட ஜனத்தொகை குறைவு. ஆனால், அங்கே புத்தகங்கள் மில்லியன் காப்பிகள் விற்கின்றன. இங்கே ஒரு புத்தகம் ஆயிரம் காப்பி விற்பதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இது எவ்வளவு வெட்கப் பட வேண்டிய விஷயம்.

     நாம் பாடத்தை மட்டும் படித்தால் போதாது. பாடத்துக்கு வெளியேயும் படிக்க வேண்டும். ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள்தான் ஷேக்ஸ்பியர் படிக்க வேண்டும் என்பதில்லை. ஷேக்ஸ்பியர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை எல்லோரும் படிக்கலாம். அவரிடம் வாழ்க்கைக்குப் பயன் படும் கருத்துகள் நிறைய இருக்கின்றன. தத்துவம் படிக்கும் மாணவர்கள்தான் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலைப் படிக்க வேண்டும் என்று இல்லை. அவரது புத்தகங்களை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். அவரது சிந்தனைகள் வாசிப்பவனை மேன்மையடையச்செய்யும்.

          நாம் வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. ஏனெனில், நமது பாடத்திட்டம் ந்வீனமாக இல்லை. எல்லாப் பாடங்களுமே பழம் பஞ்சாங்கங்களாக இருக்கின்றன. போன தலைமுறை வாசித்ததையே இந்தத் தலைமுறையும் வாசிக்கும் அவலம் இங்கே இருக்கிறது. உதாரணமாக, உளவியல் என்றால் நமது பாடத்திட்டத்தில் சிக்மண்ட் ஃபிராய்ட்தான் இருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்த லக்கான், ஜூலியா கிறிஸ்தேவா, லியூஸ் இரிகாரே பற்றி நமது பாடத்திட்டம் மௌனம் சாதிக்கிறது. அதேபோல், இலக்கியம் என்றால் நவீன இலக்கியம் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆங்கில இலக்கியம் என்றால், ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமர்செட் மாம், ஹெமிங்வேயுடன் நின்று விடுகிறது. ஜான் பார்த், டொனால்ட் பார்த்தல்மே, தாமஸ் பிஞ்சன் போன்ற பின் நவீன எழுத்தாளர்கள் பற்றி மூச்சு விடுவதில்லை. தமிழ் இலக்கியம் என்றால் உரை நடை இலக்கியம் டாக்டர் மு.வ. வுடன் நின்று விடுகிறது. மிஞ்சி மிஞ்சிப் போனால் போனால் போகட்டும் என்று ஜெயகாந்தன் வரை வருகிறார்கள். தமிழில் இயங்கி வரும் பின் நவீன இலக்கியம் பற்றி யாருமே பேசுவதில்லை. அதைப் பற்றி மாணவர்கள் யாராவது தெரிந்து கொள்ள விரும்பினாலும், அதற்கு உதவ யாரும் தயாராக இல்லை. இப்படிப்பட்ட குறையுடைய பாடத்திட்டத்தில் நாம் என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் முழுமை பெற இயலாது. எனவேதான் நாம் பாடத்திட்டத்துக்கு வெளியேயும் படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
     இன்றைக்குப் பெண்களாகிய நீங்கள் எல்லாத்துறைகளிலும் முன்னணியில் இருக்கிறீர்கள். பெண்களின் இடம் சமையலறை என்ற கருத்து இப்போது மாறி இருக்கிறது. இனியும் உங்கள் வாழ்க்கை நீங்கள், உங்கள் வீடு, உங்கள் குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் இருக்க முடியாது. அந்தப் பழைய சிறையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். உங்கள் எல்லை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. வானமே உங்கள் எல்லையாக இருக்க வேண்டும். அதைச் சாதிக்கப் புத்தகங்கள் உங்களுக்குத் துணை நிற்கும்.

     இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் படித்தவர்கள் இருக்கும் மாநிலங்களாக கேரளாவையும், மேற்கு வங்காளத்தையும் குறிப்பிடுவார்கள். அதற்குக் காரணம் இந்த இரண்டு மாநிலங்களிலும்தான் புத்தகம் படிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கேரளாவைச்சேர்ந்த அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்றார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அமர்த்தியா சென் நொபல் பரிசு பெற்றார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் இருக்கும் நாம் என்றைக்கு இதைச் சாதிக்கப் போகிறோம்?  எனவே நாம் நமது வாசிப்பின் எல்லைகளை விரிவு படுத்திக் கொள்ள வேண்டும். வாசிப்பில் வானமே நமது எல்லையாக இருக்க வேண்டும்.

     எல்லாப் புத்தகங்களும் நல்ல புத்தகங்கள் அல்ல. மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; தீயவர்களும் இருக்கிறார்கள். அதைப் போலவே புத்தகங்களும் அவற்றை எழுதிய ஆசிரியரின் குணத்துக்கேற்றவாறு இருக்கின்றன. எனவே புத்தகங்களைப் படிக்கு முன் அது நல்ல புத்தகமா அல்லது தீய புத்தகமா என்று தேர்வு செய்து படிக்க வேண்டும். இல்லாவிட்டால் நமது நேரமும், உழைப்பும் வீணாகி விடும். அதற்காகவே அனுபவம் வாய்ந்த அறிஞர்கள், விமர்சகர்கள் இருக்கிறார்கள் அவர்களது ஆலோசனை நமக்குப் புத்தகம் தேர்வு செய்வதில் உதவி செய்யும். ஒரு தடவை பெர்னார்ட் ஷா தனது நண்பரிடம் ஒரு புத்தகத்தைக் காட்டி ‘உலகத்திலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான் என்றாராம். அதற்கு அந்த நண்பர், எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு ஷா ‘இந்தப் புத்தகத்தை ஒருவன் இரவல் வாங்கிக் கொண்டு போனான். பத்திரமாகத் திருப்பிக் கொடுத்து விட்டான் என்றாராம். நல்ல புத்தகத்தை  இரவல் கொடுத்தால் திரும்பி வராது என்பதற்கு இதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

     நமது யுகம் வன்முறையின் யுகம். பயங்கரவாதம் குடி கொண்டிருக்கும் யுகம். எப்போது எங்கே குண்டு வெடிக்கும் என்று மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் யுகம். இந்த வன்முறையாளர்கள் யார்? பயங்கரவாதிகள் ஆளுமைக்குறைபாடு என்னும் மனநோயின் விளைவாக உருவாகிறார்கள் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்கள் ஒரு போதும் ஆளுமைக் குறைபாடு என்ற நோய்க்கு ஆளாவதில்லை என்று சொல்ல முடியும். நல்ல புத்தகம் ஒரு வாசகனிடம் விலகி நிற்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. இந்தத் தன்மை ஒரு அறிவுஜீவித்தன்மையாகும். இத்தகைய அறிவுஜீவித்தன்மையானது தன்னையே கூட விலகி நின்று பார்க்கக் கூடிய பக்குவத்தை ஒரு வாசகனுக்கு அளிக்கிறது. தன்னையே விலகி நின்று பார்க்கும் ஒரு மனிதன் அடுத்தவனைக் கொல்ல மாட்டான். ஒரு போதும் பயங்கரவாதி ஆக மாட்டான்.

     சில வகை மன நோயாளிகளுக்குப் புத்தகங்கள் மருந்தாகப் பயன் படுகின்றன. எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் எழுத்தாளரின் தாயும் தந்தையும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டனர். அந்த எழுத்தாளர் மனமுடைந்து ஊர் ஊராகப் பிச்சைக்காரனைப் போல் அலைந்து திரிந்தார். அப்போது அவர் சந்தித்த உளவியல் மருத்துவ நண்பர் ஒருவர் அவரிடம் புத்தகம் படிக்குமாறும், நிறைய எழுதுமாறும் அறிவுரை சொன்னார்.  அதன்படி தினமும் புத்தகம் படித்தும், எழுதியும் வந்த அவர் விரைவிலேயே குணமானார். இன்று புகழ் பெற்ற எழுத்தாளராகவும் இருக்கிறார்.. அவர் பிச்சைக்காரனாக அலைந்து திரிந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை ஒரு நாவலாக எழுதினார். அந்த நாவல் ஒரு திரைப்படமாகவும் வந்தது.

     எனவே, புத்தகங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

     எனவே நாம் அனைவரும் புத்தகங்களை நேசிக்க வேண்டும். தினம் தினம் வாசிக்க வேண்டும். ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தது 5 மணி நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும் என்கிறார் அறிஞர் ஜான்சன். புத்தகம் நம்மை மேன்மையுறச் செய்யும். நாம் மேன்மையடந்தால் நம் நாடு மேன்மையடையும். எனவே புத்தகங்களைப் படித்து நாம் மேன்மையடைய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.



(15.7.2009 அன்று சென்னை அண்ணா நகரில்
உள்ள அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரியின்
வெள்ளி விழாவில் கலந்து கொண்டு,
புத்தகக் கண்காட்சியை ரிப்பன் வெட்டித் திறந்து
வைத்து விட்டு எம்.ஜி.சுரேஷ் ஆற்றிய உரை)



                              ######




No comments:

Post a Comment