Friday, December 19, 2014

எம்.ஜி. சுரேஷ்
ஜூலியா கிறிஸ்தேவா


ளவியலின் தந்தை என்று கருதப்படும் சிக்மண்ட் ஃபிராய்ட் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்களில் ஒருவர். கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஐன்ஸ்டீன் போன்றோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர். குழந்தைமை, ஆளுமை, நினைவாற்றல், பாலியல், சிகிச்சை முறை போன்ற சொற்களுக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்கிக் காட்டியவர்.'காமத்தின் மூலம் கடவுள்' என்ற கோட்பாட்டை ஓஷோ முன் வைப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னமே 'காமத்தின் மூலம் உளவியல்' என்ற கோட்பாட்டை முன் வைத்தவர்.

ஃபிராய்ட் முதன் முதலில் “இணங்க வைக்கும் கோட்பாடு” (seduction theory) என்ற கோட்பாட்டைக் கண்டறிந்தார். அதன்படி 'மனப் பிறழ்வு ஏற்படும் ஒவ்வொரு மனிதனும், தான் குழந்தையாக இருந்தபோது பாலியல் ரீதியாக ஒரு பெரிய மனிதரால் காமத்துக்கு இணங்க வைக்கப்பட்டு, அதனால் உள்ளம் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பின் விளைவாக உளவியல் நெருக்கடிக்கு ஆளாகி, அதன் விளைவாக மன நலம் பாதிக்கப்பட்டவர்களே.' இதற்கு ஆதாரமாகப் பல மனப்பிறழ்வு நோயாளிகளை ஆய்வு செய்து தக்க ஆதாரங்களைத் திரட்டினார். இந்தக் கோட்பாடு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெரும் எதிர்ப்புக்குள்ளானது. அரசும், அரசு சார்ந்த மேல் தட்டு சமூகமும் அதிருப்தி தெரிவித்தது. மேல் தட்டு வர்க்கத்தின் அதிருப்திக்குப் பயந்த ஃபிராய்ட், உடனே தனது நிலையிலிருந்து பின் வாங்கினார். சட்டென்று தனது புதிய கோட்பாட்டை முன் வைத்தார். அதன்படி, உளவியலின் அடிப்படை காமமே என்று அறிவித்தார். 'கால் பந்தாட்டத்தில் இரண்டு கம்பங்களுக்கு நடுவில் பந்தை உதைத்து கோல் போடுவதாக இருந்தாலும் சரி, தலைவன் மேல் தொண்டன் செலுத்தும் வீர வழிபாடாக இருந்தாலும் சரி எல்லாமே காம விழைவின் வெளிபாடே' என்றார் ஃபிராய்ட்.

ஒரு குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே அதன் காம உணர்வுகள் தோற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன என்பது அவரது வாதம். ஒரு குழந்தை தன் தாயின் மார்புக்காம்புகளைச் சுவைப்பது, தனது பிறப்புறுப்பைத் தொட்டுப் பார்த்தல், மல ஜலம் கழித்தல் போன்ற அனுபவங்களில் சுகம் அனுபவிக்கிறது. இந்த இன்பங்கள் காம அனுபவத்தின் ஆரம்ப நிலைகளே என்கிறார் ஃபிராய்ட்.

ஒரு பிறந்த குழந்தைக்கும் இந்த உலகத்துக்கும் இடையே இருக்கும் முதல் தொடர்பு தாயின் மார்பகம் மட்டுமே. குழந்தையின் தாய் என்பது தாயின் மார்பகம்தான். பின்னர்தான் அது தனது தாயின் முகம், உடல், தாயின் வாசனை போன்ற இதர அம்சங்களை உணர்ந்து கொள்கிறது. தாயின் மேல் காதல் கொள்கிறது. இந்தக் காதலை ஃபிராய்ட் 'ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்' (Oedipus complex) என்று அழைக்கிறார்.

கிரேக்க நாடகாசிரியரான சோபாக்ளிஸ் ஒரு புகழ் பெற்ற நாடகத்தை எழுதினார். அதன் பெயர் 'மன்னன் ஈடிபஸ்.' அன்னிய நாட்டின் மேல் படையெடுத்துச் செல்லும் மன்னன் ஈடிபஸ் அந்த நாட்டு மன்னனைக் கொன்று அவன் மனைவியை மணந்து கொள்கிறான். பின்புதான் தெரிகிறது; அவனால் கொல்லப்பட்ட மன்னன் ஈடிபஸின் தந்தை. அவனால் மணந்து கொள்ளப்பட்ட அரசி அவனது தாய். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் ஈடிபஸ் மன்னன் சிக்கிக் கொள்வதை அக்கதை பேசுகிறது. இந்த நெருக்கடி ஓர் உளவியல் நெருக்கடி. இதையே ஃபிராய்ட் தனது பிரதான பிரச்சினையாகப் பார்க்கிறார். ஒரு முக்கியமான உளவியல் கோட்பாடாகக் கட்டமைக்கிறார்.

ஆண் குழந்தை தன் தாயை மிகவும் நேசிக்கிறது. அதேபோல் தாயும் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்றும் விரும்புகிறது. ஆனால், அதற்கு இடையூறு வருகிறது; இன்னொரு போட்டியாளனின் மூலம். குழந்தைக்கும் அந்த போட்டியாளனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தன் தாயின் அன்பைப் பெற முயலும் போட்டியாளனான தந்தை என்ற ஆணைத் தனது வில்லனாகப் பார்க்கிறது. அந்த நபரை வெறுக்கிறது.

ஒரு குழந்தையின் மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலத்தை இந்த ஈடிபஸ் சிக்கலுக்கான காலக்கட்டமாக சிக்மண்ட் ஃபிராய்ட் வரையறுக்கிறார். ஓர் ஆண்குழந்தை தனது பால்ய பருவத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டுமானால் அது ஈடிபஸ் சிக்கல் பருவத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்பது ஃபிராய்டியக் கோட்பாடு.

ஃபிராய்டுக்குப் பின் வந்த இன்னொரு முக்கியமான உளவியலாளரான லக்கான் ஃபிராய்டின் கோட்பாட்டை அனுமானமாக்கிக் காட்டினார். ஆனாலும், ஃபிராய்டின் ஈடிபஸ் சிக்கல் என்ற கோட்பாட்டை அவர் மறுக்கவில்லை.

ஃபிராய்டுக்கும், லக்கானுக்கும் பின் வந்த ஜூலியா கிறிஸ்தேவா அவர்கள் இருவரையும் நிராகரித்தார்.

ஃபிராய்டும் சரி லக்கானும் சரி பிறந்த ஆண் குழந்தையின் உளவியல் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அந்த ஆண் குழந்தையின் ஈடிபஸ் சிக்கல் பற்றி மட்டுமே விவாதிக்கிறார்கள். பெண் குழந்தைகளும்தான் பிறக்கின்றன. அவற்றின் நிலை என்ன என்ற கேள்வியை கிறிஸ்தேவா எழுப்பினார். இதற்கு உளவியல் துறை பதில் சொல்ல முடியாமல் விழித்தது.

'பெண்கள் மாறுதலை எதிர்க்கிறார்கள்; எதிர்ப்படும் பிரச்சனைகளுக்கு செயலற்றவர்களாகத் தங்களை ஒப்புக் கொடுக்கிறார்கள். அவர்கள் தங்களை மேன்மைப் படுத்திக் கொள்வதில்லை' என்று 1925 ல் ஃபிராய்ட் ஒரு கட்டுரையில் எழுதினார். மேலும், இன்னொரு சந்தர்ப்பத்தில், 'ஒரு பெண்ணின் மனதில் என்ன் இருக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியவில்லை' என்றும் கூறினார். இதன் மூலம் அவர் தான் ஒரு ஆணாதிக்க சிந்தனையாளராக கவனிக்கப்பட்டார்.

லக்கானோ இன்னும் ஒரு படி மேலே போய், 'உளவியலில் பெண் என்பதே இல்லை' (woman does not exist) என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தார்.

இத்தகைய சூழ்நிலையில் கிறிஸ்தேவாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பல்கேரியாவில் பிறந்து ஃபிரான்ஸுக்குப் புலம் பெயர்ந்து போன இளம் பெண்ணான ஜூலியா கிறிஸ்தேவா இரண்டு விதமான வெறுப்புகளுக்கு ஆளானார். ஒன்று: அந்நிய தேசத்தவர் என்றாலே ஃபிரெஞ்சுக்காரர்கள் காட்டும் வெறுப்பு. இரண்டு: பெண்கள் என்றாலே ஃபிரெஞ்சுக்காரர்கள் வெளிப்படுத்தும் ஆணாதிக்க வெறுப்பு. இந்த இரண்டையும் கடந்து கிறிஸ்தேவா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆளுமையாக உருவானது தற்செயலான நிகழ்வு அல்ல. சிமோன் தெ புவா, ஹெலன் சிசு, லியூஸ் இரிகாரே போன்ற மிக முக்கியமான பெண்ணியவாதிகளில் ஒருவராக கிறிஸ்தேவா மதிப்பிடப்படுகிறார். நவீன பெண்ணியத்தைக் கடந்து பின் நவீன பெண்ணியத்தை வடிவமைத்தவராக அவர் கொண்டாடப்படுகிறார்.

கிறிஸ்தேவா ஒரு போதும் தன்னைப் பெண்ணியவாதியாகக் காட்டிக் கொள்ள விரும்பியதில்லை. எனினும், இவரை ஒதுக்கி விட்டு எந்தப் பெண்ணியவாதியும் தனது ஆய்வை ஆரம்பிக்க முடியாது.

கிறிஸ்தேவா உடல் குறித்து எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை. பெண், பெண்மை, பெண் தன்மை, என்றெல்லாம் பெண்ணின் உடல் தனியே வைத்துப் பார்க்கப்படுகிறது. இது ஆண் மைய வாதம் பெண் உடல் மீது ஆதிக்கம் செலுத்த நிறுவப்பட்ட அரசியல். பெண்ணை பலவீனமாகப் பார்க்கும் அரசியல் இது. மனம் - உடல், கலாசாரம் - இயற்கை, பொருள் - பிரதிநிதித்துவம் போன்றவை குறித்து கிறிஸ்தேவா எழுதிக் குவித்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் விரிவும் ஆழமும் மிக்கவை.

ஃபிராய்டும், லக்கானும் வளர்த்தெடுத்த உளவியல் பகுப்பாய்வை (psycho analysis) குறியியல் சார்ந்த பகுப்பாய்வாக மாற்றியமைத்தவர் கிறிஸ்தேவா. இதன் மூலம் நவீன உளவியல பின் நவீன உளவியலாக மாறியது.

ஈடிபஸ் சிக்கலைப் பற்றிப் பேசும் போது கிறிஸ்தேவா பின் வருமாறு கூறினார்:

'ஒரு ஆண் குழந்தை ஈடிபஸ் சிக்கலில் ஈடுபடுவது இருக்கட்டும். பெண் குழந்தையின் நிலை என்ன? ஒரு பெண் குழந்தை தன்னைத் தன் தாயோடு அடையாளப்படுத்திக் கொண்டு பார்க்கும் போது, இந்த ஆணாதிக்க சமூகத்தில் தன் தாய் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கண்டு, தன்னையும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்வாள். அல்லது அவள் தன்னைத் தனது தந்தையுடன் அடையாளப்படுத்திப் பார்க்கும் போது, தான் விளிம்பு நிலையில் இருப்பதாக உணர்வதில்லை. இது ஒரு ஊசலாட்டம். இந்த ஊசலாட்டம் அபாயகரமானது. இது பெண்ணை ஒன்று தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும். அல்லது மனப்பிறழ்வுக்கு உள்ளாக்கும். எனவே, ஒரு பெண் இந்த ஊசலாட்டத்திலிருந்து வெளியேற வேண்டும்.'


கிறிஸ்தேவா பெண்ணியம் மற்றும் பெண்ணியம் சார்ந்த உளவியலை வளர்த்தெடுத்தார். ஃபிராய்டிய, லக்கானிய ஆணாதிக்க உளவியல் கோட்பாடுகளை கலகலக்க வைத்தார்.

No comments:

Post a Comment